விவாகரத்து, குழந்தை மறைப்பு! அண்ணனின் ‘போலி’ காதலுக்கு தம்பி கொடுத்த மரண தண்டனை! பெங்களூரு கொடூரம்!

பெங்களூருவின் எச்ஏஎல் கோடகள்ளி பகுதியில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவி அமிருதா, அவரது முன்னாள் காதலனின் தம்பியால் நடுரோட்டில் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமிருதா அங்குள்ள ஒரு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டே, தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக்கு உதவுவதற்காக அருகில் உள்ள ஒரு பீட்சா கடையில் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓம் சக்தி கோவிலுக்கு மாலை போடும் நிகழ்வின் போது, அமிருதாவின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம் அமிருதாவிற்கும் தனுஷிற்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், தனுஷிற்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையுடன் இருந்ததும், பின்னர் மனைவியை விவாகரத்து செய்ததும் அமிருதாவிற்குத் தெரியாது. தான் இன்னும் திருமணம் ஆகாதவர் என்று முழுப் பொய்யைக் கூறி தனுஷ் அமிருதாவை ஏமாற்றி வந்துள்ளார்.

சமீபத்தில் தனுஷின் உண்மை முகம் மற்றும் அவரது கடந்த கால விவாகரத்து குறித்துத் தெரிந்ததும் அமிருதா பெரும் அதிர்ச்சியடைந்தார். தன்னை ஏமாற்றிய தனுஷை மன்னிக்க முடியாத அவர், உடனடியாக தனது 3 ஆண்டுக்கால காதலை முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், தன்னை மீண்டும் காதலிக்குமாறும், திருமணம் செய்யுமாறும் அமிருதாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அமிருதா உடன்படாததால், தனுஷின் தம்பி சூர்யா அமிருதாவை நேரில் சந்தித்து, “என் அண்ணனைத் திருமணம் செய்யவில்லை என்றால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  எனக்கும் நக்கலா குட்டிக்கதை பேசத் தெரியும்! அவையில் இருந்து ஓடிய திமுகவிற்கு முதல்வர் விஜய் நக்கல்!: "5 நிமிஷம் பேசினதுக்கே கொளத்தூர் தொகுதி காலி!" சட்டமன்றத்தில் தவெக அரசு காட்டிய மாஸ் அதிரடி!

இருப்பினும், இந்த மிரட்டல்களைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட அமிருதா, தனது படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். தங்களை மதிக்காமல் புறக்கணித்த அமிருதாவைப் பழிவாங்க முடிவெடுத்த அண்ணன் தனுஷ் மற்றும் தம்பி சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டினர். அதன்படி, அமிருதா வழக்கமாகப் பகுதிநேர வேலைக்குச் செல்லும் நேரத்தை நோட்டமிட்ட சூர்யா, நடுரோட்டில் அவரை வழிமறித்துக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

அமிருதாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற சூர்யாவைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த அமிருதா இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைச் சதித்திட்டத்தை வகுத்துக் கொடுத்த அண்ணன் தனுஷ் மற்றும் நேரில் கொடூரத் தாக்குதலை நடத்திய தம்பி சூர்யா ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.