ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசிய பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்து அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேயராக, துணை முதல்வராக மற்றும் முதல்வராகப் பல்லாண்டுகள் மக்கள் பணியாற்றிய மு.க.ஸ்டாலினைப் பார்த்து “கொத்து பரோட்டா போடுவோம்” என விஜய் பேசுவது முற்றிலும் தவறானது மற்றும் அநாகரிகமானது என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எந்த நேரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வருகிறதோ, அப்போது த.வெ.க-வின் ஆட்சி முடிந்துவிடும்; அவருக்குக் கோபம் வர வேண்டும், அது நிச்சயம் வரும். தங்களின் ஆட்சியே இன்னும் தமிழ்நாட்டில் நிலையில்லாமல் இருக்கின்ற சூழலில், கரூரில் வந்து விஜய் இப்படி டான்ஸ் ஆடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது அரசியல் நாகரிகத்தைக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, தானும் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாகவும், தங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைப் பேசியதால் திமுகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளதாகவும், ஆனால் ஒருபோதும் முதல்வரை அவமானமாகப் பேசியதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதேபோல், அதிமுகவிலிருந்து விலகியவர்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், நமது தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நம்மை விட அதிகமாகப் புகழ்ந்துவிட்டு, இன்று சுயநலத்திற்காக அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக மண்ணைக் கவ்வுவது உறுதி என்று மிகக் காரசாரமாகத் தனது பேட்டியில் எச்சரித்துள்ளார்.