தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்னை குறித்துத் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகரான மாஸ்டர் மகேந்திரன் பேசிய சில வார்த்தைகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. பொதுமக்களின் அன்றாடப் பாதிப்பை உணராமல் அலட்சியமாகப் பேசியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்திற்கு அவரே தற்பொழுது ஒரு புதிய விளக்கத்தைத் தந்துள்ளார்.
முன்னதாகப் பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகர் மாஸ்டர் மகேந்திரன், “இவ்வளவு நாட்களாகத் தமிழ்நாட்டில் கரண்ட் இல்லாமல் நன்றாகத்தானே இருந்தீர்கள்? இப்போது 6 மாத காலம் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது என்றால், அதை எதிர்கொண்டுவிட்டுப் போக வேண்டியதுதானே?” என்று சற்றே அதிரடியாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், “அப்படி இல்லாவிட்டால் சோலார் போன்ற மாற்று வழிகளுக்கு மாறியிருக்க வேண்டியதுதானே? சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுப்பது எப்படி என்பது எனக்கு நன்றாகவே தெரியும், வேண்டுமானால் என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் பேசியிருந்தார்.
மின்வெட்டால் அவதிப்படும் மக்களின் வலியைச் சற்றும் உணராமல், “வேணும்காட்டி எங்க வீட்டுல வந்து வயர மாட்டிக்குங்க” என்று வடிவேலு பாணியில் மகேந்திரன் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதைப் பார்த்த இணையவாசிகள், “தம்பி இன்னும் நீங்க மாஸ்டர் மகேந்திரனாவே இருக்கீங்க போல!” என்று மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கினர். வெயில்ல கஷ்டப்படுற பொதுமக்களோட கஷ்டம் புரியாம இப்படி தற்குறித்தனமா பேசுறீங்களே என்று இணையவாசிகள் இவரை மிகக் கொடூரமாகக் கேலி செய்து வந்தனர்.
விவகாரம் பூதாகரமானதை அடுத்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு மாஸ்டர் மகேந்திரன் தற்பொழுது காரசாரமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் இந்த நிமிடம் வரை எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை, எதிர்காலத்திலும் அப்படி ஒரு எண்ணம் இல்லை. சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய ஷார்ட்ஸ் (Shorts) வீடியோக்களில் இதுதான் பெரிய பிரச்சனை” என்று ஓப்பனாகப் பேசியுள்ளார். அதற்கு முன்னாடியும் பின்னாடியும் நான் என்ன பேசினேன் என்ற முழு பின்னணி தெரியாமல், அந்த 20 நொடி வீடியோவை வைத்துக்கொண்டு வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வெயில் அதிகமாக இருக்கும் நமது ஊரில், மின்சாரத் தேவையை சமாளிக்க சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்றுதான் நான் கூற வந்தேன் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கேரளாவில் கொச்சின் விமான நிலையம் முழுக்க முழுக்க சோலார் முறையில் இயங்கும்போது, நம்மூரில் அது ஏன் சாத்தியமில்லை என்பதுதான் என் ஆதங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனே திமிரா பேசறேன்னும், தற்குறின்னு திட்டினாலும் நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன், இதற்காகப் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.