வாரத்தில் 3 நாள் முதல் மனைவி, 3 நாள் 2வது மனைவி! ஞாயிறு ‘வீக்லி ஆஃப்’! கணவரைப் பிரித்துக் கொடுத்த கிராம பஞ்சாயத்தின் விசித்திரத் தீர்ப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நஜாகத் என்பவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதன் பின்னர் முதல் மனைவியையும், குழந்தைகளையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் மட்டுமே வசித்து வந்த நஜாகத், குடும்பப் பராமரிப்பிற்கும் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பஞ்சாயத்து கூட்டத்தைக் கூட்டினர்.

மணிநேரக் கலந்தாய்வுக்குப் பிறகு பஞ்சாயத்து தலைவர்கள் ‘3-3-1’ என்ற அதிர்ச்சி தரும் மேலாண்மை தீர்ப்பை வழங்கினர். அதன்படி, திங்கள் முதல் புதன் வரை முதல் மனைவியுடனும், வியாழன் முதல் சனி வரை இரண்டாவது மனைவியுடனும் கணவர் வசிக்க வேண்டும். வாரத்தின் 7-வது நாளான ஞாயிற்றுக்கிழமையை கணவரின் சொந்த விருப்பத்திற்கே விட்டுவிட்டு, அன்று அவர் எங்கு வேண்டுமானாலும் தங்குவதற்கு ‘வீக்லி ஆஃப்’ வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 2,000 பணமும் ரேஷன் பொருட்களும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டு பஞ்சாயத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.