தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தொகையாக ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் திறன், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய தொலைநோக்குத் திட்டங்கள் இம்மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் “வெற்றி மடிக்கணினித் திட்டம்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு விலையில்லா நவீன மடிக்கணினிகள் வழங்குவதற்காக மட்டும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் “புதிய பயணம்.. புதிய வேகம்!” (SMAR CYCLE) என்ற திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5.32 லட்சம் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் ரூ.277 கோடி செலவில் வழங்கப்படவுள்ளன.
பள்ளி மாணவர்களின் தங்கும் வசதி மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய ‘பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள்’ என்ற பெயரில் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட உள்ளன. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம் மற்றும் பாடப்புத்தகங்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ள இத்திட்டத்தின் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10,000 பள்ளிகளில் தூய்மை, குடிநீர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் “சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ்” திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.139 கோடியும், 3,734 அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் ‘பள்ளி நிறைவுத் திட்டத்திற்கு’ நடப்பாண்டில் ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வித்துறைக்கு இதுவரை இல்லாத அளவிலான நிதி ஒதுக்கீடும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நவீன நலத்திட்டங்களும் வரவிருக்கும் காலங்களில் அரசுப் பள்ளிகளின் தரத்தை வெகுவாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், டிஜிட்டல் கற்றல் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருசேர உள்ளடக்கிய இந்த பட்ஜெட் அறிவிப்புகள், தமிழகக் கல்வித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.





