டாஸ்மாக்கில் இனி ₹10 கூடுதல் கிடையாது! ஊழியர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் விக்னேஷ்!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் நீண்ட நாட்களாகத் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான அதிரடி தீர்வை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் நுகர்வோர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கள்ளத்தனமான நேரங்களில் மது விற்பனை செய்யப்படுவதை ஏற்கனவே அரசு முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் கூடுதல் விலை தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில், அடுத்த நாளே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.

இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்ட வாடகை பிரச்சனை, பெட்டி இறக்கும் செலவு மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற காரணங்களை அரசு கனிவோடு பரிசீலித்து அவற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வை ஏற்று, முதலமைச்சரின் உத்தரவின்படி 25 சதவீத சம்பள உயர்வு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி விற்பனையாளர்களுக்கு ₹14,340-லிருந்து ₹17,925 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ₹15,530-லிருந்து ₹19,413 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சூப்பர்வைசர்களுக்கான ஊதியம் ₹17,850-லிருந்து ₹22,313 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவினால் அரசுக்குக் கூடுதலாக ₹110.74 கோடி செலவு ஏற்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ஊழியர்களின் சம்பளத்திற்காக ₹553.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விக்னேஷ் விவரித்தார்.

ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான இஎஸ்ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கும் தவெக அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர்களுக்கான அனைத்துப் பிரச்சனைகளையும் அரசு தீர்த்து வைத்துள்ளதால், இனி எந்தவொரு காரணத்தையும் கூறாமல் அரசு நிர்ணயித்த எம்ஆர்பி (MRP) விலைக்குள் மட்டும்தான் மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்று அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார். இதற்கு முன்னதாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பெண்ட் மற்றும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் மீண்டும் மீண்டும் இந்த விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் நேரடியாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார். நுகர்வோரின் பணம் நுகர்வோரிடமே இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.