“சட்டமன்றத்தில் ஆதாரங்களை உடைப்பார் என்ற அச்சம்!” – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ய முயற்சி? கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!

விவசாயிகளின் நலன்களுக்காகவும், காவிரி உரிமைக்காகவும், குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைத் திரித்துக்கூறி, அவரை அமைதியாக்கும் நோக்கில் கைது செய்ய அரசு சதி செய்து வருவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி ஊடகத்திற்குத் தொலைபேசி வாயிலாக அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசிய அவர், தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்குப் கிடைத்த மக்கள் ஆதரவை, ஆளும் அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

நாளைய தினம் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் தோல்விகளையும், நாடகங்களையும், ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அம்பலப்படுத்தி விடுவார் என்ற அச்சமே இந்த அவசர நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என அவர் கூறினார். சட்டமன்றத்திற்கு அவர் வருவதைத் தடுக்கும் நோக்கில், கூட்டத்தொடருக்கு முந்தைய நாளே அவரைச் சட்டவிரோதமாகக் கைது செய்ய நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்றும், இதனைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் காவிரி தண்ணீர் முறைப்படி திறக்கப்பட்டு டெல்டா விவசாயிகள் நிம்மதியாக இருந்த நிலையில், தற்போதைய சூழலில் அவர்கள் வேதனைக்கு ஆளாகியிருப்பதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கான கடுமையான அரசியல் விளைவுகளை, ஆளும்கட்சி அனுபவிக்க நேரிடும் என்றும், எந்தவொரு வழக்கையும் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றும் ஆர்.எஸ்.பாரதி தனது உரையாடலில் உறுதியாகத் தெரிவித்தார்.