தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதியின் வேட்பாளருமான விஜய், இன்று (ஏப்ரல் 19, 2026) தனது தொகுதியில் நடத்திய பிரம்மாண்ட ரோடு ஷோ, திருச்சியையே குலுங்கச் செய்துள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே அவர் வந்தபோது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அவரது வாகனம் நகர முடியாமல் லாக் ஆனது. பலத்த பாதுகாப்பு மற்றும் போலீசாரின் ஓட்டத்திற்கு மத்தியிலும், விஜய் தனது ‘சொந்த தொகுதி’ மக்களுடன் மிகவும் நெருக்கமாக உரையாடினார்.
திருச்சி கிழக்குத் தொகுதியின் வீதிகளில் திறந்த வாகனத்தில் வலம் வந்த விஜய்க்குத் தொண்டர்கள் விதவிதமான அன்பு பரிசுகளை வழங்கினர். கூட்டத்தில் ஒரு தொண்டர் தனது குழந்தையை விஜய்யிடம் நீட்ட, அந்த குழந்தையை வாங்கி கனிவுடன் கட்டி அணைத்த விஜய், குழந்தைக்குப் போட்டு இருந்த மாலையை மீண்டும் அதற்கே சூட்டி மகிழ்ந்தார். மேலும், ஒரு சிறு ரசிகரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தொண்டர்கள் கொடுத்த பலூன்களை இரு கைகளிலும் பிடித்தபடி உற்சாகமாக வந்த விஜய், வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் மீது ரோஜா இதழ்களைத் தூவி தனது நன்றியைத் தெரிவித்தார். ஒரு தீவிர தொண்டர், விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் கட்சியின் கொள்கைத் தலைவர்கள் இருப்பது போலவும் உருவாக்கப்பட்ட புகைப்படத்தைப் பரிசளித்தார். இதனைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்ட விஜய், தொண்டர்களின் ‘விசில்’ மாலைகளையும் ஏற்றுக்கொண்டார்.
திருச்சியின் முக்கியச் சந்திப்புகளில் கிரேன் உதவியுடன் ஆளுயர பிரம்மாண்ட மாலை அணிவித்து விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் கனவுடன் தனது முதல் தேர்தலைச் சந்திக்கும் விஜய்க்கு, திருச்சியில் கிடைத்துள்ள இந்த எழுச்சி, தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தவெகவினர் நம்புகின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போதிலும், விஜய் எவ்விதத் தொய்வுமின்றி நீண்ட தூரம் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களைச் சந்தித்தார்.