பள்ளியில் ஷாக்கிங் சம்பவம்.. விளையாட்டு வகுப்பிற்கு பின் வகுப்பறையில் மாணவி திடீர் மரணம்!

டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். மயூர்பிகார் பகுதியில் உள்ள லவ்லி ஹெரிடேஜ் பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, விளையாட்டு வகுப்பு முடிந்து வகுப்பறைக்குத் திரும்பியபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வகுப்பறையில் தனது ஆசிரியரின் அருகில் நின்றுகொண்டிருந்தபோது சிறுமி திடீரென நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அருகில் ஓடிவந்த ஆசிரியர் அவரைத் தாங்கிப் பிடித்து நாற்காலியில் அமர முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை உலுக்கியுள்ளன.

பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாகச் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே உயிர் பிரிந்திருக்கக்கூடும் என்று முதற்கட்ட மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற திடீர் மாரடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு ஆபத்துகள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களிடையே அவ்வப்போது பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் விளையாட்டு நேரங்கள் மற்றும் வளாகங்களில் மாணவர்களுக்குத் தேவையான உடனடி முதலுதவி சிகிச்சைகள் மற்றும் சிபிஆர் பயிற்சி போன்ற அவசர கால மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.