“இன்றும் நாளையும் செம்ம மழை இருக்கு!” தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னைக்கும் குட் நியூஸ்!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் ஒருபுறம் சுட்டெரித்து வந்தாலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கோடை மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இன்றும் (மே 29) நாளையும் (மே 30) அடுத்த சில நாட்களுக்கும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு (Heavy Rainfall) அதிக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் இந்த மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இன்று (மே 29) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை (மே 30) மழையின் தீவிரம் அதிகரிப்பு: நாளை சனிக்கிழமை மே 30 ஆம் தேதி, மழையின் பரப்பளவு மேலும் விரிவடைந்து தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது. அதன்படி, திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "ஒரே ஒரு ஆசிரியர் இருந்தாலும் பள்ளி மூடப்படாது!" மாணவர் சேர்க்கையை உயர்த்த மாஸ் பிளான்; அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

இந்த மழைப் பொழிவானது மே மாத இறுதியோடு முடிவடையாமல், அடுத்த மாதத் தொடக்கத்திலும் நீடிக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, தேனி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை (Moderate Rain) பெய்யக்கூடும்.

இருப்பினும், மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பநிலையானது 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என்பதால், காற்றில் ஈரப்பதம் அதிகமாகி உஷ்ணமான சூழல் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.