இரயில் பயணிகளுக்கு நற்செய்தி! போர்டிங் பாயிண்ட் மாற்றும் விதிகளைத் தளர்த்தியது இந்திய இரயில்வே!

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேரப் பயண மாற்றங்களை எளிதாக்கவும் இந்திய இரயில்வே தனது போர்டிங் பாயிண்ட் (Boarding Point) மாற்றும் விதிகளில் கணிசமான தளர்வுகளை அறிவித்துள்ளது. வழக்கமாக ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தற்போது பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வரை தங்களது ஏற வேண்டிய நிலையத்தை (Boarding Station) மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியானது உறுதி செய்யப்பட்ட (Confirmed) மற்றும் ஆர்ஏசி (RAC) டிக்கெட் வைத்துள்ள பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் (Waitlist) உள்ள டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி பொருந்தாது. மேலும், இரண்டாவது ரிசர்வேஷன் சார்ட் (Second Reservation Chart) தயாரிப்பதற்கு முன்பாகவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கோர வேண்டும்.

பயணிகள் தங்களது ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக ஆன்லைனிலும், அல்லது நேரடியாக ரயில்வே கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் (PRS Counters) மூலமாகவும் போர்டிங் ஸ்டேஷனை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு பிஎன்ஆர் (PNR) எண்ணிற்கு ஒரு முறை மட்டுமே போர்டிங் பாயிண்ட்டை மாற்ற முடியும் என்பதால் பயணிகள் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

ஒருவேளை போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பிறகு, பழைய நிலையத்தில் ஏறும் பட்சத்தில், அது முறையற்ற பயணமாகக் கருதப்பட்டு அதற்கான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, போர்டிங் பாயிண்டை மாற்றிய பின் அதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற இயலாது. இந்த புதிய நடைமுறை பயணிகள் தேவையற்ற பயண ரத்துகளைத் தவிர்க்கவும், அவசர காலங்களில் அருகில் உள்ள நிலையங்களில் இருந்து ரயிலைப் பிடிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.