ஈசிஆர் டிராஃபிக்கிற்கு குட்பை! சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவை: தமிழ்நாடு அரசு சூப்பர் திட்டம்!

தலைநகர் சென்னையில் இருந்து புகழ்பெற்ற வரலாற்றுச் நகரான மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்குச் செல்ல இனி சாலைப் பயணத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. வங்காள விரிகுடா கடலின் இயற்கை அழகை ரசித்தபடியே பயணம் செய்யும் வகையில், சென்னை – புதுச்சேரி இடையே கடல்வழிப் படகு சேவையைத் தொடங்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNMB) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அதிநவீனப் போக்குவரத்துத் திட்டம், வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்குச் செல்லும் பயணிகளுக்கும் சுற்றுலாப் பிரியர்களுக்கும் மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்துள்ளது.

இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்கில், பயணிகள் படகுகள் மற்றும் சொகுசுப் படகுகளை இயக்கும் திறன் கொண்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கோரல் (Expression of Interest) முறைப்படி பெறப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அதிவேகப் படகுகளைக் கடலில் இயக்குவதன் மூலம், பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதுடன் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுவாகச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்குச் செல்பவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையை (ECR) அதிகம் பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள கடல்வழிப் படகுச் சேவையின் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, பயணிகள் எவ்வித அலைச்சலுமின்றி அமைதியான முறையில் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இப்பகுதிகளில் படகுப் போக்குவரத்து தொடங்குவது போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது மட்டுமன்றி, தமிழகத்தின் கடலோரச் சுற்றுலாத்துறைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். சென்னையில் புறப்படும் பயணிகள் வழியில் மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரைக் கோவில் அழகை ரசித்துவிட்டுப் புதுச்சேரியைச் சென்றடையும் வகையில் இச்சேவை அமையவுள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.