ரூ.45 லட்சம் கடிகாரம் திருட்டு, மதுபோதையில் கார் சவாரி: பிரபல மாடல் உதவியாளருக்குச் சிறை தண்டனை!

சிங்கப்பூரின் பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான பீட்டர் லிம்மின் மகளான கிம் லிம்மின் நிறுவனத்தில் பணியாற்றி, ரூ.45 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஆடம்பர கடிகாரம் மற்றும் பணத்தைத் திருடிய முன்னாள் பெண் ஊழியருக்குச் சிங்கப்பூர் நீதிமன்றம் 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

33 வயதான டே ஜிங் வென் (Tey Jing Wen) என்ற அந்தப் பெண் மீது நம்பிக்கை மோசடி, திருட்டு, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை மோசடியும் திருட்டும்

கிம் லிம்மிற்குச் சொந்தமான கே.எல் ஹெல்த் (KL Health) நிறுவனத்தில் மனிதவள உதவியாளராகச் சேர்ந்த டே ஜிங் வென், குறுகிய காலத்தில் உயர் பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார். கிம் லிம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் அளவிற்கு அவர் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

ஆனால், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி நிறுவனத்தின் சேஃப் பாப்ஸிலிருந்த சுமார் ரூ.45 லட்சம் (73,000 சிங்கப்பூர் டாலர்) மதிப்புள்ள படேக் பிலிப் (Patek Philippe) ஆடம்பர கடிகாரம் மற்றும் சுமார் ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடியுள்ளார். திருடப்பட்ட கடிகாரத்தைக் குறைந்த விலைக்கு விற்றுத் தனது சொந்தச் செலவுகளுக்கும் கடன் அட்டை நிலுவைகளுக்கும் அவர் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

மதுபோதையில் கார் சவாரி

கடந்த 2025 ஜூன் மாதம், கிம் லிம் சிங்கப்பூரில் இல்லாத நேரத்தில், நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காரை அனுமதி இன்றி டே ஜிங் வென் எடுத்துச் சென்றுள்ளார். நள்ளிரவில் மது அருந்திவிட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடு ஏதுமின்றி எதிர் திசையில் காரை ஓட்டிச் சென்றபோது போலிஸாரிடம் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணையில்தான், நிறுவனத்தின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பல லட்ச ரூபாய்க்குப் பெறப்பட்ட சொகுசுச் செலவுகளும், சேஃப் பாக்ஸ் திருட்டும் வெளிச்சத்திற்கு வந்தன.

நீதிமன்றத் தீர்ப்பு

வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், டே ஜிங் வென்னிற்கு 22 மாதங்கள் சிறை தண்டனையுடன், 3,500 சிங்கப்பூர் டாலர் அபராதமும், 2 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது. தனது நம்பிக்கைக்குரிய ஊழியரே இத்தகைய துரோகத்தில் ஈடுபட்டது குறித்து கிம் லிம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.