பழைய வாக்காளர்கள் மீண்டும் படிவம் 6 சமர்ப்பிக்கலாம்.. வழக்கு பாயாது! இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிரடி சுற்றறிக்கை!

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட பழைய வாக்காளர்கள், தற்போது நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது படிவம் 6-ஐச் சமர்ப்பித்து மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நவம்பர் 3 அன்று முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.

முன்னர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள், வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்ட காரணத்தால் மீண்டும் படிவம் 6-ஐச் சமர்ப்பிக்கும் போது, அவர்கள் தவறான தகவலை அளித்ததாகக் கருதப்பட மாட்டார்கள் என்று தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் (CEO) விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவு 31-ன் கீழ் நடவடிக்கை கிடையாது

பொதுவாகப் படிவம் 6 என்பது புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவமாகும். இதனால் ஏற்கனவே வாக்காளராக இருந்தவர்கள் இந்த படிவத்தைச் சமர்ப்பித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31-ன் கீழ் தவறான உறுதிமொழி அளித்ததாகக் கூறி சட்ட நடவடிக்கை பாயுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தேர்தல் ஆணையம், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதற்காகப் படிவம் 6-ஐச் சமர்ப்பிக்கும் வாக்காளர்கள் மீது தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) பிரிவு 31-ன் கீழ் எந்தவித வழக்கு நடவடிக்கையையும் தொடங்கக் கூடாது என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

முக்கியக் கட்டுப்பாடு மற்றும் உத்தரவுகள்

எனினும், இந்த விலக்கு மற்றும் பாதுகாப்பு ஒரு முக்கிய நிபந்தனைக்கு உட்பட்டதாகும். விண்ணப்பதாரர் நாட்டில் உள்ள வேறு எந்தவொரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட விவரங்கள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உண்மைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

தில்லி உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளும் உள்ளூர் மொழிகளிலும் ஊடகங்கள் மூலமாகவும் மக்களுக்கு விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை உறுதி செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.