பேரதிர்ச்சி சம்பவம்.. 3 பேரை மீட்டு மீதி பேரை காப்பாற்ற முயன்றபோது எஸ்டிஆர்எஃப் படகுகள் கவிழ்ந்தன!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பேதுப்பள்ளி ஏரியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் மீனவர்களை மீட்கச் சென்ற எஸ்டிஆர்எஃப் மற்றும் தீயணைப்புத்துறையின் இரண்டு மீட்புக் படகுகள் ஆக்ரோஷமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக ஏரியின் கலிங்குப் பகுதியில் திடீரென அதிகரித்த வெள்ள நீரால், அங்கு ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்ட எட்டு மீனவர்களை மீட்க அவசரகாலப் படையினர் அவசரமாகக் களத்தில் இறங்கினர்.

முதல் கட்டமாக மூன்று பேரை வீரர்கள் பத்திரமாக மீட்டுக் கரைசேர்த்த போதிலும், மீதமுள்ளவர்களைக் காப்பாற்றும் முயற்சியின்போது நீரின் வேகம் பல மடங்காக உயர்ந்தது. அந்தச் சவாலான சூழலில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு மீட்புப் படகுகளும் மதகுப் பகுதியில் சுழன்று கவிழ்ந்ததால், உள்ளே பணியில் இருந்த பத்து வீரர்களின் கதி என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிரைப் பொருட்படுத்தாமல் களமிறங்கிய மீட்பப் படையினரே வெள்ளத்தில் சிக்கியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாயமான வீரர்களை மீட்கும் பணிக்காகக் கூடுதல் படகுகளும் நவீன உபகரணங்களும் விரைந்து வரவழைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.