ஹோர்முஸ் ஜலசந்தியில் உரிய அனுமதியின்றிப் பயணித்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் சக்திவாய்ந்த வெடிவிபத்துகளில் சிக்கித் தீப்பிடித்து எரிவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் இந்த முக்கிய நீர்வழியில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள்!
ஈரான் நாட்டின் முத்திரைப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஹோர்முஸ் ஜலசந்தியில் அங்கீகரிக்கப்படாத பாதையில் சென்ற இரண்டு எண்ணெய் டேங்கர்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்துகளால் நிறுத்தப்பட்டு தற்போது தீப்பிடித்து எரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு சூப்பர்டேங்கர் கடல் கண்ணிவெடியில் (naval mine) சிக்கி வெடித்ததாகவும், அமெரிக்க ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்பில் சட்டவிரோதப் பாதையில் ரகசியமாகப் பயணிக்க முயன்ற இரண்டாவது டேங்கர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் காவல்படை குறிப்பிட்டுள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட டேங்கர்களின் பெயர்களோ அல்லது அவற்றின் சொந்த நாடுகளோ உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் மீதான தாக்குதல்
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அரசு எண்ணெய் நிறுவனமான ADNOC, மத்தியப் பகுதியில் அமீரகக் கடற்பரப்பிற்குள் தங்களது கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகிச் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகள் குறிப்பிட்ட இரண்டு டேங்கர்களில் இதுவும் ஒன்றா என்பது குறித்து உடனடியாகத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. பிப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்குப் போர் வெடித்தது முதல், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களை ஈரான் தீவிரமாகக் கட்டுப்படுத்தி வருவதுடன், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவும் தனது பங்குக்கு ஈரான் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை விதித்து டேங்கர் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.