அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லோகன் சர்க்கிள் பகுதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற அதிர்ச்சி தரும் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுடப்பட்டனர். இவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பதுங்கியிருந்த நிலையில், அவரும் பின்னர் துப்பாக்கிக் காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சிக் கூடத்தில் தொடங்கிய தாக்குதல்
லோகன் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள VIDA Fitness உடற்பயிற்சிக் கூடத்தில் காலை சுமார் 8 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்களில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட நபர், பின்னர் கட்டடத்திற்கு வெளியேயும் தொடர்ந்து சரமாரியாகச் சுட்டுள்ளார். அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தின் மின்தூக்கிப் பகுதியிலும் மற்றொரு நபர் சுடப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீர் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோடினர்.
சந்தேக நபர் தற்கொலை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக விரைந்த போலீசார், சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் அப்பகுதியை முடக்கி நடவடிக்கை எடுத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், அவரை வெளியே கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக அருகில் இருந்த சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. எஃப்பிஐ (FBI) மற்றும் மத்திய ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பான ஏடிஎஃப் (ATF) அதிகாரிகளும் புலனாய்வுப் பணிகளுக்கு உதவினர். குடியிருப்போர் சங்கத்துடன் (Homeowners Association) ஏற்பட்ட தகராறு இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.