“கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்ட காமராஜ்!” தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுகவில் இருந்து நீக்கம்; டிடிவி தினகரன் காட்டம்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

நீக்கத்திற்கான காரணம் என்ன?

சட்டமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை மீறி, தன்னிச்சையாக தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்த காரணத்திற்காகவே காமராஜ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், “கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதால் காமராஜ் நீக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் கடும் விமர்சனம்:

இந்த அரசியல் நகர்வை விமர்சித்த தினகரன், “தூய சக்திகள் அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல; அது சகிக்க முடியாத துர்நாற்றம். ஒரு எம்.எல்.ஏ-வை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வருவது ஜனநாயக மாண்பை அவமதிக்கும் செயலாகும்” என்று சாடினார். மேலும், சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக அவர் நீக்கப்பட்டார் எனத் திசை திருப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“வருத்தமில்லை” – காமராஜ் எம்.எல்.ஏ பேட்டி

தன் மீதான நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காமராஜ், “கடந்த 10 ஆண்டுகளாக அமமுகவிற்கு உழைத்தேன். அதற்குத் தலைமை கொடுத்த பரிசாக இந்த நீக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன்; இதில் எனக்கு வருத்தமில்லை” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவு!" தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிரடி தகவல்!

மேலும், “சட்டமன்றத்தில் முதலமைச்சரைப் புகழ்ந்து பேசுவது தவறா? வரவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக-வுக்கு எனது ஆதரவைத் தெரிவிப்பேன்” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.