ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் (BPIA), விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண் பயணி ஒருவர் கடும் ஆத்திரமடைந்து விமான நிலையத்தின் சொத்துக்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் சுமார் ரூ.49,000 மதிப்பிலான கணினி உபகரணங்கள் சேதமடைந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பயணி மீது காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டிய ‘இந்திகோ 6E 7352’ விமானத்தில் பயணிப்பதற்காக மாமோனி காரத் என்ற பெண் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். வழக்கமான சோதனையின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் புறப்பாடு முனையத்தில் இருந்த அப்பெண், அங்கிருந்த சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் முன்னிலையிலேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டார்.
Passengers at Bhubaneswar Airport were left stranded after an IndiGo flight scheduled to depart at 2:35 PM was reportedly cancelled at around 5:30 PM, several hours after the scheduled departure time, yesterday.
They were not given timely information about the cancellation and,… pic.twitter.com/pGXPT8FOP3
— Srikanth Bhalaji (@SBhalaji94) August 14, 2026
கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண் பயணி, சோதனைக் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், விசைப்பலகை மற்றும் பாஸ்போர்ட் ஸ்வைப்பிங் இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினார். இதில் ரூ.49,000 மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஏர்ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அப்பெண்ணை பாதுகாப்புப் படையினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தொகையை அவரிடமிருந்தே வசூலிக்கவும் விமான நிலைய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தொழில் நுட்பக் கோளாறால் விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் மற்றும் கட்டணத் திரும்பப்பெறுதல் வசதிகள் செய்து தரப்பட்டதாகவும் இந்திகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.