“மோடி எங்கும் போகமாட்டார்!” பாட்னாவில் கர்கேவின் சர்ச்சை பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் பாஜக பதிலடி!

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பீகாரின் முதல் முதல்வர் டாக்டர் ஸ்ரீ கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கர்கே ஆற்றிய உரை, இந்தியத் தேசிய அரசியலில் மிகப்பெரிய புயலையும் கடுமையான வார்த்தைப் போரையும் கிளப்பியுள்ளது.

விழா மேடையில் உரையாற்றிய கர்கே, பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக முறையையும், பாஜக பின்பற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், “பிரதமர் மோடி எங்கும் போகமாட்டார்” எனக் கூச்சலிட்டு இடையூறு செய்தார். இதனால் மேடையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் எழுந்த இந்தக் கூச்சலால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தலைவர் கர்கே, பொறுமையை இழந்து “மோடியின் அப்பாவே போவார்” (Modi ka baap bhi jayega) என்று மேடையிலேயே ஆவேசமாகக் கத்தினார். தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் நாட்டின் பிரதமரைக் குறித்துப் பயன்படுத்திய இந்த நாகரிகமற்ற வார்த்தை, அடுத்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் காட்டுத் தீ போலப் பரவி பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

கர்கேவின் இந்த வரம்பு மீறியப் பேச்சுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி உடனடியாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் (X) தளத்தில் மிகக் கூர்மையான பதிலை அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவரின் பேச்சை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ள பாஜக, “இந்திய எதிர்ப்புச் சக்திகள் அனைவருக்கும் இதைத் தெரிவித்துக் கொள்வதில் வருந்துகிறோம்… மோடி எங்கும் போகமாட்டார்!” (Modi Kahi Nahi Jaayega) என மிகக் காரசாரமாகப் பதிவிட்டுள்ளது.

அரசியல் மேடைகளில் தலைவர்கள் நாகரிக எல்லைகளைத் தாண்டி இறங்கி அடிப்பதும், அதற்கு இணையத்தில் உடனடியாகப் பதிலடிகள் தரப்படுவதும் வழக்கமாகிவிட்ட சூழலில், கர்கேவின் இந்தப் பேச்சு இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.