மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2027 ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் 2027 பிப்ரவரி 16 ஆம் தேதி ஒரே நேரத்தில் தொடங்குகின்றன. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
101 நாட்களுக்கு முன்பே வெளியான அட்டவணை
தேர்வு தொடங்குவதற்கு 101 நாட்களுக்கு முன்பாகவே இந்த அட்டவணையை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் கூட்டியே தேர்வு அட்டவணையை வெளியிடுவதால் மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி தேர்வுக்குத் திட்டமிட்டுத் தயாராக முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆசிரியர்களும் பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் மதிப்பீட்டுப் பணிகளைச் சீராகத் திட்டமிட இது பெரிதும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாடங்களின் அட்டவணை விவரங்கள்
10 ஆம் வகுப்பிற்கான முதல் தேர்வாகப் பெயிண்டிங் பாடமும், பிப்ரவரி 17 அன்று கணிதப் பாடமும் நடைபெறவுள்ளது. அறிவியல் தேர்வு பிப்ரவரி 22 அன்றும், ஆங்கிலத் தேர்வு பிப்ரவரி 26 அன்றும், சமூக அறிவியல் தேர்வு மார்ச் 8 அன்றும் நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பிற்குப் இயற்பியல் பாடத்துடன் பிப்ரவரி 16 அன்று தேர்வுகள் தொடங்குகின்றன. கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) பிப்ரவரி 23 அன்றும், வேதியியல் பிப்ரவரி 27 அன்றும், கணிதம் மார்ச் 9 அன்றும், வணிகவியல் (பிசினஸ் ஸ்டடீஸ்) ஏப்ரல் 1 அன்றும் நடைபெறவுள்ளன.
45 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு
2027 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பில் 26.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், 12 ஆம் வகுப்பில் 19 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர். 10 ஆம் வகுப்பில் 83 பாடங்களுக்கும், 12 ஆம் வகுப்பில் 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் என்றும், 40,000-க்கும் மேற்பட்ட பாடக் சேர்க்கைகளை ஆய்வு செய்து தேர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.