விண்வெளித் துறை என்பது வெறும் ராக்கெட்டுகளை ஏவுவதோடு முடிந்துவிடுவதில்லை என்றும், நவீனத் தொழில்நுட்பத்தின் பலன்களைச் சாமானிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வதே இதன் முதன்மை நோக்கம் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “பொதுவாக மக்கள் விண்வெளித் தொழில்நுட்பம் என்றால் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை மட்டுமே நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்படும் தரவுகள் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பங்களை சாதாரண மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பதே விண்வெளி ஆராய்ச்சியின் உண்மையான நோக்கமாகும்” என்று கூறினார்.
தொடர்ந்து, தற்போதைய உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், எல் நினோவின் தாக்கம் சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய காலநிலைப் போக்கில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தி வருவதாகக் சுட்டிக்காட்டினார்.
“சூப்பர் எல் நினோ காரணமாக ஏற்படும் மழைப்பொழிவு மாற்றம், தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சி போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதற்காக பல்வேறு அறிவியல் மாடல்கள் (Prediction Models) மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. துல்லியமான கணிப்புகளின் மூலம் மட்டுமே சாமானிய மக்களும், விவசாயிகளும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்கவும், தங்களை எதிர்கால சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தயார்படுத்திக் கொள்ளவும் முடியும்” என்று கே. சிவன் தெரிவித்தார்.
செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் பருவநிலை முன்கணிப்பு அமைப்புகள் மூலம் இந்திய விவசாயம், மீன்பிடித் துறை மற்றும் பேரிடர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.