‘குலு குலு’ பட நடிகைக்கு விழுந்த கைவிலங்கு! அவசர சிகிச்சை என அழைத்து ரூ.3.25 லட்சம் கொள்ளை!

தமிழ் திரையுலகில் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘குலு குலு’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அதுல்யா சந்திரா (29), கேரள மாநிலம் கொச்சியில் 41 வயது மருத்துவரைத் தாக்கிப் பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் போலிசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்துப் பிரபல மலையாள நடிகர் பிபின் பெரும்பில்லி மற்றும் அவர்களின் கூட்டாளி ஒருவரையும் கடவந்தரா போலிசார் கைது செய்துள்ளனர்.

அவசர சிகிச்சை என கூறி அழைப்பு

பாதிக்கப்பட்ட 41 வயது மருத்துவர் போலிசில் அளித்துள்ள புகாரின்படி, கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நடிகை அதுல்யா சந்திரா அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். தனது அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனடியாக வந்து அவசர சிகிச்சை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனை நம்பி மருத்துவர் வைட்டிலா பகுதியில் உள்ள ஒரு பிளாட்டின் 3-வது தளத்திற்குச் சென்றுள்ளார்.

ரூ.3.25 லட்சம் பொருட்கள் பறிமுதல்

பிளாட்டிற்குள் சென்ற மருத்துவரை அங்கு வீற்றிருந்த 12 பேர் கொண்ட கும்பல் வளைத்து பிடித்துத் தாக்கியுள்ளது. நடிகர் பிபின் பெரும்பில்லி மருத்துவரை நாற்காலியில் அமரவைத்து முகத்தில் பலமாகத் தாக்கியதாகவும், அதுல்யா சந்திரா அவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவரிடமிருந்த இரண்டு ஐபோன்கள், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்போன்கள் உட்பட ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அந்த கும்பல் பறித்துக்கொண்டு அவரை விரட்டியுள்ளது.

தேன் பொறி செயலா? போலிஸ் விசாரணை

சம்பவ இடத்திலிருந்து தப்பிய மருத்துவர் கடவந்தரா காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலிசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொள்ளை, கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அதுல்யா சந்திரா உட்பட 3 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பணத்தைப் பறிப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தேன் பொறி (Honeytrap) விவகாரமா என்ற கோணத்தில் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.