அழகியல் அளவுகோல்களின்படி மெலிந்த மற்றும் நாஜூக்கான கால்களே சிறந்தது என்ற எண்ணம் பலரிடமும் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால், அறிவியல் ரீதியான ஆய்வுகள் பெரிய மற்றும் பலமான தொடைகளைக் கொண்டிருப்பதே ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் சிறந்தது என்ற புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளன. 25,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தொடையின் சுற்றளவு ஒவ்வொரு 5 சென்டிமீட்டர் அதிகரிக்கும்போதும், எந்தக் காரணத்தினாலும் உயிரிழக்கும் ஆபத்து 18 சதவீதம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
தொடை பகுதியில் இருக்கும் தசைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவுகின்றன. இதனால் டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஆய்வின்படி, ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, சிறிய அல்லது மெலிந்த தொடைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் மரண ஆபத்து அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வயதான காலத்தில் உடலைத் தளர்ச்சியடையாமல் பாதுகாப்பதிலும், பிறரின் உதவியின்றி சுயமாக இயங்குவதிலும் தொடையின் முன்பகுதியில் உள்ள ‘க்வாட்ரிசெப்ஸ்’ தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், கால்களின் பலத்திற்கும் மூளையின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. சுறுசுறுப்பாக இயங்கும் கால்களின் தசைகள் சில முக்கிய வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து, மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதோடு, உடலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்கின்றன.
தொடைப் பகுதியில் சேரும் கொழுப்பும் உடலுக்கு ஆபத்தானது அல்ல. பொட்டையைச் சுற்றி சேரும் கொழுப்புடன் ஒப்பிடும்போது, தொடைகளில் உள்ள கொழுப்பு செல்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அமிலங்களை ஈர்த்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே, தொடைகளின் தோற்றத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எளிய பயிற்சிகள் மூலம் தொடைத் தசைகளின் பலத்தை அதிகரிப்பதே நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.