“அக்டோபர் 7-ல் ஆஸி.. 10-ல் பாகிஸ்தான்!”: 2027 ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு – முழு விவரம்!

உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2027-ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் (ICC Men’s ODI World Cup 2027) அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையைச் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த மெகா தொடர், 12 மைதானங்களில் மொத்தம் 57 போட்டிகளுடன் அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

இத்தொடரில் 14 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ஏ (Group A) பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பழம்பெரும் எதிரியான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தகுதிச்சுற்று அணி ஏ மற்றும் போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இத்தொடரின் குரூப் சுற்றில் இந்திய அணியின் முதல் போட்டியாக வரும் அக்டோபர் 7-ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து, சர்வதேசக் கிரிக்கெட்டின் மிகப்பெரிய மோதலாகக் கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான த்ரில்லர் போட்டி அக்டோபர் 10-ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அதே மைதானத்தில் இப்போட்டி நடைபெறுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முழுமையான குரூப் ஸ்டேஜ் போட்டி அட்டவணை இதோ:

  • அக்டோபர் 7: இந்தியா x ஆஸ்திரேலியா (கேப்டவுன்)

  • அக்டோபர் 10: இந்தியா x பாகிஸ்தான் (ஜோஹன்னஸ்பர்க்)

  • அக்டோபர் 14: இந்தியா x ஆப்கானிஸ்தான் (ட்ஷ்வானே / பிரிட்டோரியா)

  • அக்டோபர் 17: இந்தியா x குவாலிஃபயர் ஏ (ப்ளோம்ஃபோன்டைன்)

  • அக்டோபர் 24: இந்தியா x ஜிம்பாப்வே (விக்டோரியா ஃபால்ஸ்)

குரூப் சுற்று போட்டிகள் அக்டோபர் 24 வரை நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை சூப்பர்-7 சுற்றின் 21 போட்டிகள் நடைபெறும். இறுதிச் சுற்றுக்கு முந்தைய அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 17 (கேப்டவுன்) மற்றும் 18 (ட்ஷ்வானே) ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு, நவம்பர் 21-ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரம்மாண்ட இறுதிப்போட்டியுடன் உலகக்கோப்பைத் தொடர் நிறைவடையும். 2003-க்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்க மண்ணில் உலகக்கோப்பை திரும்புவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.