முல்லன்பூர் மகாராஜா யாதவிந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி தனது டெஸ்ட் வரலாற்றுப் பக்கங்களிலேயே பதிவாகாத ஒரு மாபெரும் இமாலய சாதனையைப் படைத்துள்ளது. ஆட்டத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆப்கான் வீரர்களை நிலைகுலையச் செய்த இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் (An Innings and 300 Runs) வித்தியாசத்தில் ஒரு அசாத்திய வெற்றியைத் தட்டிப்பறித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே இந்தியாவின் பெரிய சாதனையாக இருந்தது, தற்பொழுது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி 126 ரன்களும் (177 பந்துகள்), துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்களும் (165 பந்துகள்) விளாசி அணியின் பலமான அடித்தளத்திற்கு வித்திட்டனர்.
From the Spin Bowling Coach to the 𝗺𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 𝗺𝗮𝗻 on debut 🤝🙌
🎥 Sairaj Bahutule hands over a treasured memento to Manav Suthar ✨#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/xE5pGKYSPr
— BCCI (@BCCI) June 8, 2026
அவர்களுடன் இளம் வீரர் சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 81 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை இமாலய உயரத்திற்கு கொண்டு சென்றனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் 23 வயது இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அறிமுக வீரர் மானவ் சுதாரின் (Manav Suthar) மாயாஜால சுழலில் சிக்கி சிதறியது. தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே 22 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளிக் குவித்து ஆப்கானிஸ்தானை 152 ரன்களுக்கு சுருட்டினார் மானவ் சுதார். இதனால் ஃபாலோ-ஆன் (Follow-on) பெற்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் கூட்டணி மரண பயத்தைக் காட்டியது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி வெறும் 112 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் மூன்றே நாட்களில் போட்டியை முடித்து, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. ஆட்டநாயகனாக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அறிமுக வீரர் மானவ் சுதார் தேர்வு செய்யப்பட்டார்.





