இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான (EV) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் (2026) நாட்டின் மொத்த இவி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு (YoY) அடிப்படையில் 51% உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் பயணிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட தொடர் வளர்ச்சியே இந்த அபாரமான உயர்விற்குக் முதன்மைக் காரணமாகும். பண்டிகைக் காலக் கொண்டாட்டங்கள் மற்றும் மண்டலப் போக்குவரத்து அலுவலக விடுமுறைகள் காரணமாக முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த விற்பனையில் 12% சிறிய சரிவு காணப்பட்ட போதிலும், ஆண்டு வளர்ச்சியில் இவி துறை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரிக் பயணிகள் கார் பிரிவில், ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 29,687 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்துறையில் டாடா மோட்டார்ஸ் (Tata.ev) 12,984 வாகனங்களைப் பதிவு செய்து தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் 6,367 வாகனங்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜே.எஸ்.டபிள்யூ எம்.ஜி மோட்டார் (JSW MG Motor) 4,568 வாகனங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், சர்வதேச பிராண்டான வன்ஃபாஸ்ட் (VinFast) மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களும் சந்தையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.
மறுபுறம், எலக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் முன்னணி 5 நிறுவனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 69% உயர்ந்து 1,60,000 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இதில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 235% மிரட்டலான வளர்ச்சியையும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 91% வளர்ச்சியையும் பதிவு செய்து சந்தையின் மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக உருவெடுத்துள்ளன. ஒலா எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி மற்றும் ஹீரோ விடா நிறுவனங்களும் சந்தையில் தீவிரப் போட்டியை வழங்கி வருகின்றன. இந்தத் தொடர் தேவை மற்றும் ஆட்டோமொபைல் துறையின் விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, டாடா, மஹிந்திரா மற்றும் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி ஆலைகளை மேலும் விரிவாக்கம் செய்து வருகின்றன.