கொல்கத்தாவில் கால்பந்து ஜுரம்! ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக பள்ளித் தேர்வுகள் அதிரடியாக தள்ளிவைப்பு!

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கால்பந்து விளையாட்டுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை எப்போதும் உச்சத்தில் இருக்கும். தலைமுறை தலைமுறையாகக் கால்பந்தோடு உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கும் கொல்கத்தா நகரில், தற்போது ‘ஃபிஃபா உலகக் கோப்பை 2026’ கால்பந்து ஜுரம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் வெளிப்பாடாக, உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியைக் குழந்தைகள் எவ்வித அழுத்தமும் இன்றி ரசிப்பதற்காக, கொல்கத்தாவின் மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற முன்னணி தனியார் பள்ளியான ‘சவுத் பாயிண்ட் ஹைஸ்கூல்’ (South Point High School) தங்களது பள்ளித் தேர்வுகளை அதிரடியாக ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறும் இந்த 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி வரும் ஜூலை 20-ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்குத் தொடங்குகிறது. நள்ளிரவில் போட்டி நடைபெறுவதால் மாணவர்கள் தூக்கத்தைத் துறந்து கண்விழித்துப் போட்டியைப் பார்ப்பார்கள். அடுத்த நாள் காலையிலேயே தேர்வுகள் இருந்தால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் போட்டி பார்க்க அனுமதிக்கத் தயங்குவார்கள். இதனால் மாணவர்கள் ஏதோ ஒன்றை இழந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

மாணவர்களின் நலன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அனைத்துத் தேர்வுகளையும் (Pre-Midterm & Summative Tests) பள்ளி நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது.

மாற்றப்பட்ட புதிய தேர்வு அட்டவணை:

பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்வுகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன:

  • ஜூலை 20 அன்று நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஜூலை 29 அன்று நடைபெறும்.

  • ஜூலை 21 அன்று நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஜூலை 30 அன்று நடைபெறும்.

இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் ஜெய்தேவ் கோஷ் பேசுகையில், “கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியுடன் முடிந்துவிடுவதில்லை. கால்பந்து போன்ற குழு விளையாட்டுகள் மாணவர்களிடம் கூட்டு முயற்சி, விட்டுக் கொடுத்தல் மற்றும் குழுவாக இணைந்து போராடும் மிக முக்கிய வாழ்வியல் பண்புகளைக் கற்றுக்கொடுக்கின்றன. இந்த முடிவின் மூலம் எங்களில் 2 முதல் 5 சதவீத மாணவர்களுக்குக் கால்பந்து மீது வாழ்நாள் பற்று ஏற்பட்டால் கூட, அதுவே எங்களின் முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதுவோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த முற்போக்கான முடிவை மாணவர்களின் பெற்றோர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.