பக்தர்களை உரையவைத்த அதிசயம்! 4.50 கோடி நோட்டுகளால் மூடப்பட்ட விநாயகர் சிலை! பின்னணி என்ன?

பார்த்தவுடனேயே எவரையும் பிரமிப்பில் உரையவைக்கும் ஒரு கணபதி சிலை! கண்ணைப் பறிக்கும் வண்ணம் மாலை மாலையாகத் தொங்கும் புதிய ரூபாய் நோட்டுகள்! ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் என்.டி.ஆர் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திகாமாவில் தான் இந்த நம்பமுடியாத அதிசயம் அரங்கேறியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவையொட்டி, அங்குள்ள வாசவி சந்தைப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கணபதி சிலை, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

இம்முறை இங்கு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, சுமார் 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிலையின் கிரீடம், கழுத்தில் தொங்கும் மாலைகள், மற்றும் பின்னணியில் அமைக்கப்பட்ட பந்தல் முகப்பு என அனைத்து இடங்களிலும் 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் சரம் சரமாகக் கோர்க்கப்பட்டு மின்னுகின்றன. கடந்த ஆண்டு 3.33 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விழாக்குழுவினர், இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடித்து 4.50 கோடி ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளனர்.

இவ்வளவு பெரிய தொகையிலான ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். இந்த பிரம்மாண்ட பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் இணைந்துதான் இந்த நிதியைத் தற்காலிகமாகப் பங்களிப்பாக வழங்கியுள்ளனர். விழா நிறைவடைந்து விசர்ஜனம் செய்யப்பட்டதும், சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய் நோட்டும் உரிய நபர்களிடம் எவ்வித சேதாரமும் இன்றி பாதுகாப்பாகத் திருப்பி அளிக்கப்படும் என விழாக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

இந்த அபூர்வக் காட்சியைக் காணவும், 4.50 கோடி ரூபாய் நோட்டுகளால் சூழப்பட்ட விநாயகரைத் தரிசிக்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்திகாமாவில் திரண்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பணப் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளனர். அத்துடன் அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.