பிளைட் டிக்கெட் புக் பண்ண அப்புறம் விலை குறைஞ்சா ரீஃபண்ட்!: மேக்மைட்ரிப் அறிமுகம் செய்த மாஸ் ஆஃபர்!

விமானங்களில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயணச் சேவை நிறுவனமான மேக்மைட்ரிப் (MakeMyTrip) ஒரு புதிய ‘பிரைஸ் டிராப் புரோடெக்ஷன்’ (Price Drop Protection) வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக விமானப் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் சூழலில், புக் செய்த பிறகு கட்டணம் குறைந்தால் அந்தத் தொகையை வாடிக்கையாளர்களுக்கு ரீஃபண்ட் வடிவில் திரும்ப வழங்கும் நோக்கில் இந்தச் சலுகை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புச் சலுகையின் கீழ், உள்நாட்டு (Domestic) மற்றும் சர்வதேச (International) விமானப் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் ‘பிரைஸ் டிராப்’ விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். இதற்கு உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 229 முதலும், சர்வதேச விமானப் பயணங்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 349 முதலும் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் டிக்கெட் புக் செய்த நேரத்திலிருந்து விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு வரை, அந்த விமானத்தின் டிக்கெட் கட்டண மாற்றங்களை மேக்மைட்ரிப் செயலி தானாகவே தொடர்ந்து கண்காணிக்கும்.

ஒருவேளை நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டின் விலை குறைந்தால், அதுகுறித்த தகவல் உங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, குறைந்த தொகையின் வித்தியாசம் உங்களின் கணக்கிற்குத் திரும்பச் செலுத்தப்படும். இதில் உள்நாட்டு ஒருவழிப் (One-way) பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2,500 வரையிலும், இருவழிப் (Round-trip) பயணங்களுக்கு ரூ. 5,000 வரையிலும் ரீஃபண்ட் பெற முடியும். அதேபோல, சர்வதேச ஒருவழிப் பயணங்களுக்கு ரூ. 3,000 வரையிலும், இருவழிப் பயணங்களுக்கு ரூ. 6,000 வரையிலும் கட்டண வித்தியாசத் தொகை திரும்பக் கிடைக்கும்.

இதேபோன்று, பிளிப்கார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளியர்ட்ரிப் (Cleartrip) தளமும் சுற்றுலா பேக்கேஜ்களுக்காக ‘பிரைஸ்பீட்’ (PriceBeat) ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் புக் செய்த ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் சுற்றுலா பேக்கேஜ்கள் வேறு தளங்களில் இதைவிடக் குறைந்த விலைக்குக் கிடைத்தால், விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத்தைக் குறைத்து வழங்குகிறது. இவைத் தவிர, ஹாப்பிஃபேர்ஸ், கோய்பிபோ, ஈஸ்மைட்ரிப் போன்ற பிற ஆன்லைன் டிராவல் பிளாட்ஃபார்ம்களும் பயணிகளைக் கவர பல்வேறு கட்டணத் தள்ளுபடி வசதிகளை வழங்கி வருகின்றன.