தினமும் கனவுல வர்றான்.. பீதியில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொலையை ஒப்புக்கொண்ட வாலிபர்!

தான் கொலை செய்த நண்பனின் உருவம் தொடர்ந்து தனது கனவில் வந்து அச்சுறுத்தியதால் ஏற்பட்ட கடும் பயம் காரணமாக, வாலிபர் ஒருவர் நேராகக் காவல் நிலையம் சென்று தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டு சரணடைந்த விசித்திரச் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிராவின் டொம்பிவிலி பகுதியைச் சேர்ந்த பிரபு கர்கடே (24) என்பவர் ஹவுஸ்கீப்பிங் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான விஷால் மதுகர் கதம் (43) என்பவருடன் இவருக்குச் சமீபத்தில் மது அருந்தியபோது கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபு கர்கடே விஷாலைத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாட்சியங்களை மறைக்க முயன்ற கொலையாளி

நண்பனைக் கொலை செய்ததை மறைக்க முயன்ற பிரபு கர்கடே, விஷாலின் உடலை ஒரு சாக்குப்பையில் திணித்தார். பின்னர் கோபர் லிங்க் ரோடு பகுதியிலுள்ள ஆள்நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய புல்வெளியில் அந்த உடலை வீசிவிட்டுத் தப்பியோடினார். விஷால் கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அவரது உடல் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், கொலையைச் செய்துவிட்டுத் தப்பிய குற்றவாளியின் மனசாட்சி அவரை உலுக்கியது. தான் கொன்ற விஷால் தினமும் தனது கனவில் வந்து நிற்பதாகவும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கும் நடுக்கத்திற்கும் ஆளாகியிருப்பதாகவும் பிரபு கர்கடே தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் சரண்

கனவு தரும் அச்சத்தைத் தாங்க முடியாத அவர், நேராக விஷ்ணு நகர் காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறை அதிகாரிகள் முன்பு தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், தான் விஷாலின் உடலை எந்த இடத்தில் வீசினேன் என்பதை நேரில் அழைத்துச் சென்று காட்டியுள்ளார்.

இதையடுத்து விஷ்ணு நகர் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டம் பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து பிரபு கர்கடையைக் கைது செய்தனர். குற்றவாளியைக் குற்றஉணர்வு எவ்வாறு காவல்துறையின் பிடியில் கொண்டு சேர்த்துள்ளது என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.