அரசியல் மேடைகளில் எதிராளிகளை வீழ்த்துவதை விட, சொந்த வாழ்க்கையில் சட்டப் போராட்டங்களை முடித்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குவதுதான் தற்போதைய இந்திய விஐபி வட்டாரங்களின் ஹாட் டாப்பிக்! 1994-இல் பாயல் என்பவருடன் திருமண உறவில் இணைந்து, 2011 முதல் தனித்து வாழ்ந்து வந்த ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று தனது விவாகரத்தை முறைப்படி பெற்ற கையோடு, மூத்த பத்திரிகையாளர் நிதி ரஸ்தானைக் கரம் பிடித்துள்ளார். “ஒரு புதிய பயணம் தொடங்கியது” என்ற கேப்ஷனோடு ஒமர் அப்துல்லா சோஷியல் மீடியாவில் பகிர்ந்த கல்யாணப் போட்டோக்கள் தான் இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்டிங்!
அரசியல் தலைவர்கள் தங்கள் முதல் வாழ்க்கைப் பயணத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பின்னர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாழ்க்கையில் இணைவது இந்திய அரசியலுக்குப் புதிதல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங், தனக்கும் பிரபல தொகுப்பாளினி அம்ரிதா ராய்க்கும் இடையே இருந்த காதலை வெளிப்படையாக அறிவித்துத் திருமணம் செய்து கொண்டது நாடுறிந்த கதை. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, முதலமைச்சரான பிறகு குருப்ரீத் கவுர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். அதேபோல, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, கன்னட நடிகை ராதிகாவைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் அப்போது தென்னிந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய கிசுகிசுவாகும்.
இப்போது கேள்வி என்னவென்றால், வடக்கை உலுக்கிய இந்த ‘செகண்ட் இன்னிங்ஸ்’ அலை, தெற்கே உள்ள தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசியல் களம் பக்கம் எப்போது வீசப்போகிறது என்பதுதான்! ஆந்திராவில் பவன் கல்யாணின் மூன்று திருமணங்கள் ஏற்கனவே பெரும் அரசியல் விவாதப் பொருளாக உள்ள நிலையில், தெலுங்குத் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள சில இளம் முன்னாள் எம்.எல்.ஏ-க்களும், தெலங்கானா பிராந்தியத்தில் உள்ள முன்னணி வாரிசு அரசியல் புள்ளிகளும் தங்களது விவாகரத்து வழக்குகளை ரகசியமாக முடித்துவிட்டு, அடுத்த கட்டத் திருமண வாழ்க்கைக்குத் தயாராகி வருவதாக ஹைதராபாத் ஃபிலிம் நகர் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் கிளப் வட்டாரங்களில் ஒரே முணுமுணுப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சமீபத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியுள்ள ஒரு முக்கியத் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கிசுகிசுக்கள் கோடம்பாக்கம் மற்றும் போயஸ் கார்டன் காரிடார்களில் எப்போதும் உலா வந்தபடிதான் இருக்கின்றன. அதேபோல, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள சில இளம் தலைவர்கள் மற்றும் விவாகரத்தாகித் தனிமையில் இருக்கும் சில தென்மாவட்டச் செல்வாக்குமிக்க அரசியல் புள்ளிகள், தேர்தல் பிரச்சாரச் சூடு தணிந்ததும் தங்களது இரண்டாவது திருமண அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று சென்னை அரசியல் லூட்டிகளில் பேசிச் சிரிக்கிறார்கள்!