தொழில்நுட்ப உலகில் தற்போது ‘குய்ஷிங்’ (Quishing) எனப்படும் கியூஆர் கோட் பிஷிங் மோசடிகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft), இந்த ஆண்டுக்கான தனது பாதுகாப்பு அறிக்கையில் இது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சுமார் 830 கோடி மின்னஞ்சல் சார்ந்த பிஷிங் அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சாதாரண பிஷிங் முறையில் இணையதள லிங்குகள் (Links) நேரடியாக அனுப்பப்படும். ஆனால், இந்த குய்ஷிங் முறையில் மின்னஞ்சல்களில் கியூஆர் கோடுகள் (QR Codes) அனுப்பப்படுகின்றன. பொதுவாக, மின்னஞ்சல் பாதுகாப்பு அமைப்புகள் கியூஆர் கோடுகளை வெறும் படங்களாக மட்டுமே கருதுவதால், அவற்றுக்குள் மறைந்திருக்கும் ஆபத்தான இணைப்புகளைக் கண்டறியத் தவறிவிடுகின்றன. இதையே சைபர் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மோசடி நபர்கள் பெரும்பாலும் “உங்கள் வங்கி பாஸ்வேர்ட் காலாவதியாகிறது” அல்லது “உங்களுக்குப் பரிசு விழுந்துள்ளது” என்பது போன்ற அவசரமான அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள். அந்த மின்னஞ்சலில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுமாறு உங்களைத் தூண்டுவார்கள். நீங்கள் ஸ்கேன் செய்தவுடன், அது உங்களை ஒரு போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு நீங்கள் உள்ளீடு செய்யும் பாஸ்வேர்ட், வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உடனடியாகத் திருடப்படும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்களுக்குப் பின்வரும் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது:
-
நம்பகமற்ற ஆதாரங்கள்: உங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள கியூஆர் கோடுகளை ஒருபோதும் ஸ்கேன் செய்யாதீர்கள்.
-
கேமராவை மட்டும் பயன்படுத்தவும்: கியூஆர் கோடை ஸ்கேன் செய்யப் போனில் உள்ள கேமராவையே பயன்படுத்துங்கள்; மூன்றாம் தரப்பு செயலிகளை (Third-party apps) உபயோகிக்க வேண்டாம்.
-
யுஆர்எல் சரிபார்ப்பு: கோடை ஸ்கேன் செய்தபின் தோன்றும் இணையதள முகவரி (URL) சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
-
அவசரமான சலுகைகள்: உங்களை உடனடியாகச் செயல்படத் தூண்டும் மின்னஞ்சல்கள் குறித்து எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள்.
டிஜிட்டல் உலகில் கியூஆர் கோடு பயன்படுத்தும் போது எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதே இத்தகைய ‘குய்ஷிங்’ மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.





