பாலிவுட் நடிகையும் மண்டி தொகுதி பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் இடையே வெடித்துள்ள புதிய வார்த்தை மோதல், இந்திய அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்கள் குறித்து கங்கனா தெரிவித்த சர்ச்சை கருத்துகளே இந்த மோதலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
சமீபத்தில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் “Gen Z” தலைமுறையின் போராட்டங்களைக் கடுமையாக விமர்சித்த கங்கனா ரணாவத், இந்தத் தலைமுறையினரை “ஜெனரேஷன் கட்டர்” (Generation Gutter) எனப் பகிரங்கமாகக் குறிப்பிட்டார். இளைஞர்களின் போராட்ட குணத்தையும் அவர்களின் சிந்தனைப் போக்கையும் அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த கருத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கங்கனாவின் இந்த பேச்சு குறித்து யோகா குரு பாபா ராம்தேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் கங்கனாவை மிகக் கடுமையாகச் சாடினார். கங்கனாவின் கடந்த கால வாழ்க்கையை நேரடியாக விமர்சித்த பாபா ராம்தேவ், “அவருடைய சிறுவயது வாழ்க்கை எப்படிப்பட்டது? அவரது இளமைக் காலம் எப்படி இருந்தது? கடந்த காலத்தில் அவருடைய சாதனைகள் என்ன? இத்தகைய மனிதர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. நாட்டின் எதிர்காலமான இளைஞர்களை ‘ஜெனரேஷன் கட்டர்’ என்று அழைப்பது ஒருவரது சீரழிந்த மனநிலையின் அடையாளம்” எனத் தாக்குதல் தொடுத்தார். கங்கனாவின் கல்வித் தகுதியையும், அவரது கடந்த காலப் பின்னணியையும் ராம்தேவ் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியது பரபரப்பை கூட்டியது.
ராம்தேவின் இந்த பேச்சுக்கு உடனடியாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார் கங்கனா. ராம்தேவ் தனக்கு ஒழுக்க பாடம் எடுக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், “பாபாஜி, என்னுடைய இளமைப் பருவத்தைப் பற்றியோ அல்லது என்னுடைய படுக்கையறை பற்றியோ பகல்கனவு காண வேண்டாம். வதந்திகளையும் வம்புகளையும் வைத்துதான் நீங்கள் பேசுகிறீர்கள். தவறான விளம்பரங்களுக்காகவும், போலி மருந்துக் கோரிக்கைகளுக்காகவும் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து நான் ஒருபோதும் டோஸ் வாங்கியதில்லை. எனவே எனக்குக் குணநலன் பற்றிய பாடங்களை நடத்தாதீர்கள். உங்களை விட என்னுடைய ஒழுக்கம் மற்றும் குணம் எவ்வளவோ சிறந்தது; இங்கு எந்தப் மோசடியும் கண்டுபிடிக்கப்படவில்லை” எனப் பாபா ராம்தேவ் சந்தித்த உச்ச நீதிமன்ற வழக்கைக் குறிப்பிட்டு நேரடியாகக் குத்திக் காட்டினார்.
கங்கனாவின் இந்த நேரடித் தாக்குதலைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாபா ராம்தேவ், இந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கும் தொனியில் பேசினார். “நான் இந்த விவகாரத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை. சுவாமி ராம்தேவ் யார், நாட்டின் வளர்ச்சிக்கு எனது பங்களிப்பு என்ன என்பது இந்த நாட்டிற்கு நன்றாகத் தெரியும். எனவே இத்தகைய நபர்களைப் பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை” என்று கூறி, விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.
அரசியல் பிரவேசத்திற்கு பிறகும் தொடர்ச்சியாகச் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து வரும் கங்கனா ரணாவத்திற்கும், பாபா ராம்தேவிற்கும் இடையே வெடித்துள்ள இந்த நேரடி வார்த்தை மோதல், சமூக ஊடகங்களில் இன்னும் தணியாமல் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.