தமிழகத்தில் பள்ளிகளில் ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் இரண்டில் சுமார் ஒரு லட்சம் பேர் தோல்வியடைந்துள்ள கொடூர உண்மை ஒட்டுமொத்தக் கல்வித்துறையையும் உலுக்கியெடுத்துள்ளது! இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்றில் கணிசமான தேர்ச்சிப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளி வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தகுதித் தேர்வில் மண்ணைக் கவ்வியிருப்பது பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையின் மீதான கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு தாள் ஒன்றில் தேர்வு எழுதிய 59,535 ஆசிரியர்களில் 47,628 பேர் தேர்ச்சி பெற்று 80.8 சதவீதச் சாதனைப் பதிவை எட்டியுள்ளனர். இதில் 11,907 பேர் தேர்ச்சி பெறத் தவறியுள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் இரண்டை எழுதிய 1,60,929 ஆசிரியர்களில் வெறும் 61,153 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மிக மோசமாக 99,776 ஆசிரியர்கள் தோல்வியைத் தழுவியதால், தாள் இரண்டின் தேர்ச்சி சதவீதம் வெறும் 38.3 ஆகக் பாதாளத்திற்குச் சரிந்துள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக வகுப்பறைகளில் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர்களில் 61 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் போனதற்கு யார் பொறுப்பு என்ற சாட்டையடி கேள்விகள் எழுந்துள்ளன. தொடர்ச்சியான பணிச்சுமை, பயிற்சி இன்மையா அல்லது ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கில் தயாரிக்கப்படும் சிக்கலான வினாத்தாள்களா என்ற ஆதங்கம் ஆசிரியர்கள் மத்தியில் வெடித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஆசிரியர்களின் தகுதியை அளவிடும் தேர்வுகளிலேயே இத்தனை பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது, அரசின் பயிற்சிக் கொள்கைகளில் உள்ள மிகப்பெரிய ஓட்டையை அப்பட்டமாகக் காட்டுகிறது!