டைட்டானிக்கை விடப் பெரிய கப்பல்! கடலுக்குள் மூழ்கடிக்கப்படும் அமெரிக்காவின் வரலாற்றுப் பெருமை!

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை விடப் பிரம்மாண்டமானது, அட்லாண்டிக் பெருங்கடலை மிகக் குறைந்த நேரத்தில் கடந்த உலக சாதனைக்குச் சொந்தமானதுமான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க சொகுசுக் கப்பல் ‘எஸ்.எஸ். யுனைடெட் ஸ்டேட்ஸ்’ (SS United States). பல தசாப்தங்களாகப் பயன்பாடின்றி இருந்த இந்த அமெரிக்காவின் பெருமைமிகு கப்பல், தற்போது சமுத்திரத்தின் அடியில் உலகின் மிகப்பெரிய செயற்கை பவளப்பாறையாக (Artificial Reef) புதிய அவதாரம் எடுக்கத் தயாராகி வருகிறது.

டைட்டானிக்கை விட பெரிய பிரம்மாண்டம்!

900 அடி நீளம் கொண்ட ‘எஸ்.எஸ். யுனைடெட் ஸ்டேட்ஸ்’ கப்பல் 1950-களில் 70 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது. இது சாதாரண சொகுசுக் கப்பலாக மட்டுமின்றி, அவசர காலங்களில் ஒரே நேரத்தில் 14,000 ராணுவ வீரர்களைக் கொண்டு செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்திலேயே நியூயார்க்கில் இருந்து ஐரோப்பாவுக்கு 3 நாட்கள் 11 மணி நேரத்தில் சென்று அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த அதிவேகக் கப்பல் என்ற சாதனையைப் படைத்தது.

இந்த வரலாற்றுப் பெருமைமிக்க கப்பலில் ஹேரி ட்ரூமேன், டுவைட் ஐசனோவர், ஜான் எஃப். கென்னடி மற்றும் பில் கிளிண்டன் ஆகிய நான்கு அமெரிக்க அதிபர்கள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பவளப்பாறையாக மாறும் விபரம்

1969 ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இக்கப்பல், பல ஆண்டுகள் கைவிடப்பட்ட நிலையில் இரும்புக் கழிவாக உடைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், கடல்சார் சூழலியலைப் பாதுகாக்கவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் ஃப்ளோரிடாவின் ஒகாலூசா கவுண்டி (Okaloosa County) நிர்வாகம் சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.43 கோடி) செலவில் இக்கப்பலை வாங்கியது.

ஃப்ளோரிடாவின் டெஸ்டின்-ஃபோர்ட் வால்டன் பீச்சிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்குள் 150 அடி ஆழத்தில் இக்கப்பல் மூழ்கடிக்கப்படவுள்ளது. இதற்காகக் கப்பலின் உள்ளே இருந்த ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் கடலடி மீன்கள் மற்றும் உயிரினங்களுக்குப் பாதுகாப்பான வாழிடம் அமைவதுடன், ஸ்கூபா டைவிங் மற்றும் மீன்பிடி சுற்றுலா மூலம் அப்பகுதி பொருளாதாரமும் பெரும் வளர்ச்சியடையும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கப்பலின் நினைவைப் போற்றும் வகையில் கரையில் பிரத்யேக அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.