’50 மாவட்டங்கள், 20 புதிய தாலுகாக்கள்!’ சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, நிர்வாக வசதியை மேம்படுத்தும் நோக்கில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்துவதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியபோதே அவர் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், பொதுமக்கள் சேவையை விரைவுபடுத்தும் வகையில் அரசு எடுத்த நடவடிக்கைகளால், கடந்த நூறு நாட்களில் மட்டும் 39.26 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் உடனுக்குடன் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்யும் போதே சுமார் 45 சதவீத பேருக்கு உடனடி பட்டா மாற்றம் வழங்கும் புதிய நடைமுறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் பேரவையில் சுட்டிக்காட்டினார்.

மாநிலத்தின் நீராதாரங்கள் மற்றும் வறட்சி மேலாண்மை குறித்து விளக்கிய அவர், மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உரிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அடைப்படையாகக் கொண்டு தேவையான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.

நிர்வாக அமைப்பை மேலும் எளிமையாக்கப் புதிதாக 20 தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்றும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்க 83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களை மாவட்ட நிர்வாகங்கள் எவ்விதத் தொய்வுமின்றித் திறம்பட எதிர்கொள்வதற்காக, முன்னெச்சரிக்கை நிதியாக 50 கோடி ரூபாய் முன்கூட்டியே வழங்கப்படுவதாகவும் தனது உரையில் அமைச்சர் செங்கோட்டையன் விவரித்தார்.