அமெரிக்காவில் H-1B மற்றும் பிற வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புதிய சட்டச் சிக்கல்கள் மற்றும் நடைமுறைச் சவால்கள் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசா கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, ஏற்கெனவே சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்களையும் மீண்டும் முழுமையாக ஆய்வு செய்யும் வகையில் புதிய விதிமாற்றத்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முன்மொழிந்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் பணியாளர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நடைமுறையும் புதிய மாற்றமும்
தற்போதைய நடைமுறையின்படி, ஒரே நிறுவனத்தில், அதே பணியில் தொடர்ந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது H-1B விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) ஏற்கெனவே வழங்கிய ஒப்புதலுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை முற்றிலுமாக மாற்ற DHS திட்டமிட்டுள்ளது. அதாவது, இதற்கு முன்பு விசா ஒப்புதல் பெற்றிருந்தாலும், நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுதிகளை மீண்டும் புதிதாக ஆய்வு செய்ய முடியும். வேலை மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் கூட இந்த மறுஆய்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
விசா பிரிவுகளில் ஏற்படும் பாதிப்புகள்
கடந்த அக்டோபர் 14, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய முன்மொழிவு, ஆண்டுதோறும் சுமார் 2.08 லட்சம் விண்ணப்பங்களைப் பாதிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. H-1B விசா பிரிவுகள் மட்டுமின்றி, L-1, O-1, TN மற்றும் E போன்ற பல்வேறு முக்கிய விசா பிரிவுகளுக்கும் இந்த புதிய விதிமுறை மாற்றம் பொருந்த வாய்ப்புள்ளது. முந்தைய ஒப்புதல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விசா நீட்டிப்பு வழங்குவது சரியான நடைமுறை அல்ல என்றும், விண்ணப்பதாரர்களின் தகுதிகளை அதிகாரிகள் முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய ஊழியர்களுக்குக் காத்திருக்கும் சவால்கள்
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், இந்திய ஊழியர்கள் விசா நீட்டிப்புக்காகக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும், விண்ணப்பப் பரிசீலனை காலமும் வழக்கத்தை விடத் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதிலும், அமெரிக்காவில் தொடர்ந்து தடையின்றி வேலை செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனினும், இந்த விதிமாற்றம் தற்போதைக்கு இறுதி செய்யப்படவில்லை என்பதும், புதிய விதிமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் வரை தற்போதைய நடைமுறையே தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.