குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறப் பாடகர் கோபால் சாது (Gopal Sadhu) மீது அவரது ரசிகர்கள் கரன்சி நோட்டுகளை மழையாகப் பொழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜுனாகத் மாவட்டம் கம்பாலியா கிராமத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பான பஜன் (Bhajan) நிகழ்ச்சியின் போது இந்த வியக்கத்தக்கச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாடகர் கோபால் சாது ஹார்மோனியம் வாசித்துத் தனது கணீரென்ற குரலில் பாடத் தொடங்கியதும், அங்கிருந்த ரசிகர்கள் பரவசமடைந்து மேடைக்கு வந்து பண மூட்டைகளை அவர் மீது கொட்டினர். சில நிமிடங்களிலேயே பாடகரும் மேடையும் கரன்சி நோட்டுகளால் முழுவதுமாக மூடப்பட்டன. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
இந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளித்துள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பாடகர் மீது பொழியப்பட்ட இந்தப் பணம் அனைத்தும் தனிப்பட்ட லாபத்திற்காகச் சேகரிக்கப்பட்டது அல்ல என்று கூறியுள்ளனர். இந்தத் தொகையை ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், பல்வேறு சமூக சேவைப் பணிகளுக்காகவும் பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
குஜராத் கலாச்சாரத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் அல்லது பஜன் நிகழ்ச்சிகளின் போது பாடகர்களைக் கௌரவிக்கும் விதமாகப் பணம் வீசுவது (Ghol) ஒரு நீண்டகாலப் பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் பெரும்பாலும் கோவில்கள், பசு காப்பகங்கள் அல்லது கல்வி உதவித்தொகை போன்ற பொது நலக் காரியங்களுக்கே வழங்கப்படுகிறது. இதற்கு முன்னரும் குஜராத்தில் பல முன்னணி பாடகர்களுக்கு இது போன்ற சிறப்புகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.