Say No to Big Weddings: லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்க வேண்டாம்; இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் ‘மைக்ரோ வெடிங்’ – பின்னணி என்ன?

திருமணம் என்பது மனித வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு திருவிழா ஆகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது ஒரு வாழ்நாள் கொண்டாட்டமாக இருப்பதை விட, தங்களின் கௌரவத்தைக் காட்டும் ஒரு ஆடம்பர மேடையாக மாறிவிட்டது. டிஜே சத்தம், பிரம்மாண்டமான லைட்டிங், நூற்றுக்கணக்கான உணவு வகைகள், பல நாட்களாக நீடிக்கும் ஹல்தி, சங்கீத், மெஹந்தி, வரவேற்பு நிகழ்ச்சிகள் என ஒரு நடுத்தரக் குடும்பத்தின் திருமணச் செலவு மட்டுமே சராசரியாக ₹30 லட்சத்தில் இருந்து ₹70 லட்சம் வரை எகிறுகிறது.

பெற்றோர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும், சில மணிநேரங்களில் முடிந்துவிடும் ஒரு திருமண ஆடம்பரத்திற்காக வாரி இறைக்கிறார்கள். இந்தச் சமூகச் சக்கரத்தின் இடுக்கில் மாட்டிக்கொள்ள விரும்பாத இன்றைய இளந்தலைமுறையினர், தற்போது ஒரு புதிய புரட்சிகரமான மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளனர். அதுதான் ‘மைக்ரோ வெடிங்’ (Micro Wedding) எனப்படும் எளிய மற்றும் நெருக்கமான திருமண முறை.

மைக்ரோ வெடிங் என்பது தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே கொண்டு, மிகக் குறைந்த செலவில் நிம்மதியாக நடத்தப்படும் ஒரு எளிய நிகழ்வாகும். இன்றைய இளைஞர்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்வரும் முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:

  • வகைதொகையற்ற பண விரயம் தவிர்ப்பு: ஒரு நாள் பகட்டிற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்குவதை விட, அந்தப் பணத்தை எதிர்காலத்திற்குப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என இளைஞர்கள் கருதுகிறார்கள்.

  • புத்திசாலித்தனமான முதலீடுகள்: திருமணத்திற்குச் செலவிடப்படும் பெரும் தொகையைக் கொண்டு நிலம் வாங்குவது, சொந்தமாக வீடு கட்டுவது அல்லது புதிய தொழில் நிறுவனங்களைத் (Startups) தொடங்குவது போன்ற ஆக்கப்பூர்வமான காரியங்களில் முதலீடு செய்கிறார்கள்.

  • குறைவான மன அழுத்தம்: ஆயிரக்கணக்கான விருந்தினர்களைக் கவனிக்கும் பதற்றம் இல்லாததால், மணமக்கள் தங்களின் திருமண நாளை முழுமனதோடு நிம்மதியாக ரசித்து மகிழ முடிகிறது .

  • உணவு மற்றும் பொருள் விரயம் தடுப்பு: பிரம்மாண்ட திருமணങ്ങളില്‍ டன் கணக்கில் உணவு வீணாவதைத் தடுத்து, சமூகப் பொறுப்புடன் இந்த மைக்ரோ வெடிங் முறையை அணுகுகிறார்கள்.

மேலைநாடுகளில் ஏற்கனவே இந்த எளிய திருமண முறை பிரபலமாக உள்ள நிலையில், தற்போது இந்திய இளைஞர்களும் இதை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். சிலர் ஒரு படி மேலே சென்று, தங்களின் திருமணச் செலவிற்காக ஒதுக்கிய பணத்தைச் சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி மனிதநேயத்தை நிலைநாட்டுகிறார்கள்.

காண்போரை வியக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், இரண்டு மனங்களின் இணைப்பைத் தூய்மையான அன்போடும், திருப்திகரமான விருந்தோடும் கொண்டாடுவதையே இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர். பெற்றோர்களின் உழைப்பை மதித்து, ஆடம்பரங்களை உடைத்தெறியும் இந்த ‘மைக்ரோ வெடிங்’ கலாச்சாரம் எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.