பிரிட்டனில் பள்ளி அளவில் மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க தேர்வாகக் கருதப்படும் ‘ஜெனரல் சர்டிபிகேட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன்’ (GCSE) கணிதப் பொதுத்தேர்வை வெறும் 7 வயதிலேயே எழுதி, மாபெரும் சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஜிவியான் ரெட்டி த்ருவா. லண்டன் ஹெலிங்டன் பகுதியில் வசித்து வரும் இந்தச் சிறுவன், தனது திறமையால் ஒட்டுமொத்தப் பிரிட்டன் நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பியர்சன் எட்செல் அமைப்பால் நடத்தப்படும் மூன்று தாள்களைக் கொண்ட இந்த கடினமான உயர்மட்டத் தேர்வை பொதுவாக 14 முதல் 16 வயதுடைய மாணவர்களே எழுதுவார்கள். ஆனால், தனது வயதை விடப் பத்து ஆண்டுகள் முன்னதாகவே இத்தேர்வை எதிர்கொண்ட ஜிவியான், 240 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்று உயரிய ‘கிரேடு 8’ பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இத்தேர்வின் முடிவுகள் வெளியானபோது, இவ்வளவு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனத் தானும் எதிர்பார்க்கவில்லை என்று அந்தச் சிறுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளான்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏஐ பொறியாளரான கட்டா த்ருவா குமார் ரெட்டி – ஐஸ்வர்யா தம்பதியினரின் மகனான ஜிவியான், சிறுவயதிலேயே அவரிடம் இருந்த அசாதாரணமான கணிதத் திறமையைக் காட்டியுள்ளார். ஐந்து வயதிலேயே மகனின் கூர்மையான அறிவைக் கண்டறிந்த பெற்றோர், அவனை வீட்டிலேயே வைத்துப் படிக்க வைக்கத் தொடங்கி (Homeschooling) தொடர்ச்சியாக ஊக்குவித்து வந்துள்ளனர்.
தனக்குக் கணிதம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறும் ஜிவியான், எதிர்காலத்தில் முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவும் வகையில் பயனுள்ள அதிநவீன ரோபோக்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளான். அடுத்த ஆண்டு ஏ-லெவல் (A-level) கணிதத் தேர்வை எழுதத் தயாராகி வரும் இந்தச் சிறுவனின் அபார சாதனையைப் பாராட்டி சர்வதேச அளவில் பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.