உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்துத் தமது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்குப் பல்வேறு முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
பிரதமர் தனது உரையில், “பொதுமக்கள் அவசியமின்றி தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு உள்நாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது நாட்டின் பணத்தைச் சேமித்து, உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவிக்க சுதேசி பொருட்களைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
View this post on Instagram
மேலும், இந்தியச் செல்வ வளம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் ‘Wed in India’ (இந்தியாவிலேயே திருமணம்) இயக்கத்தை வலியுறுத்திப் பேசிய அவர், கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்குக் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவிலேயே திருமணங்களை நடத்தி உள்ளூர் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு குடிமகனும் சுதேசி கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமே இந்தியாவை உலகின் வலிமையான பொருளாதார சக்தியாக உயர்த்த முடியும் எனத் தனது வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார்.