தீபாவளி முடிந்ததும் அதிரடி அறிவிப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் முக்கிய திட்டம்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திட்டமிட்டுள்ளது. பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து தொகுதிகளுக்கே இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி, ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அங்குக் மறுதேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வ நிபந்தனை உள்ளது. இதனையடுத்து, விதிகளுக்கு உட்பட்டுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

நீதிமன்ற நடைமுறைகளும் காலக்கெடுவும்

குறிப்பிட்ட இந்த ஐந்து தொகுதிகளிலும் முன்னர் நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், இடைத்தேர்தல் அறிவிப்பாணை வெளியிடுவதில் சட்டச் சிக்கல்கள் நீடித்து வந்தன. தற்போது உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத் தடைகள் விலகும் சூழல் உருவாகியுள்ளது.

சட்டப் பூர்வமான ஆறு மாத கால வரம்பு முடிவடையும் நிலையை எட்டி வருவதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் முறையான வழிகாட்டுதல்களைப் பெற்றுத் தேர்தலை நடத்தத் தேர்தல் அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தீபாவளிக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகை முடிந்த கையோடு, இந்த ஐந்து தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வ தேர்தல் கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்புமனுத் தாக்கல், மனுக்கள் பரிசீலனை, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் டிசம்பர் 20-க்குள் நிறைவு செய்யும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.