சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் புயல் எச்சரிக்கையையும் மீறி கடலுக்குச் சென்று படகு கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தொடர்பில்லாமல் இருந்த நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் கடற்கரைப் பகுதியில் 4 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதை அமைச்சர் மரிய வில்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த அமைச்சர், விபத்துக்கு உள்ளான படகில் முறையான பாதுகாப்பு உபகரணங்களோ, லைஃப் ஜாக்கெட் அல்லது காப்பீட்டுச் சான்றிதழ்களோ எதுவுமே இல்லை எனத் தெரிவித்தார். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் எவ்வித அனுமதியுமின்றிப் படகை வெளியனுப்பியதில் கடுமையான நடைமுறை மீறல்கள் நடந்துள்ளதாகவும், இதில் சிண்டிகேட் முறையில் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனரா என்பது குறித்துத் துறைரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
மீதமுள்ள 5 மீனவர்களின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களின் உடல்களை விரைவாக மீட்டுக் சென்னை கொண்டுவர ஆந்திராவிற்கு நேரில் செல்வதாக அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் காசிமேடு துறைமுகத்தில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் விதிகளை முழுமையாகச் சீரமைக்க அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள அரசு, போட் உரிமையாளர்களின் அலட்சியப்போக்கு மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்புக் குறைபாடுகள் குறித்து முழுமையான விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதி முழுவதும் சோகமயமாகக் காணப்படுகிறது.