தமிழ் திரைப்பட நடிகர் சந்தானத்துடன் ‘குளு குளு’ படத்தில் நடித்த மலையாள நடிகை அதுல்யா சந்திரா மற்றும் பிபின் பெரும்பள்ளி ஆகிய சினிமா நட்சத்திரங்கள் கைதான கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக புகார் அளித்த கொச்சி மருத்துவர் மீது தற்போது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் புகாரும் நடிகர்களின் கைது நடவடிக்கையும்
கொச்சியைச் சேர்ந்த 41 வயதான மருத்துவர் ஜான்சன் வர்கீஸ், நோயாளியைப் பார்க்க அழைப்பதாகக் கூறி கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தங்களை ஒரு பிளாட்டிற்கு வரவழைத்து, 12 பேர் கொண்ட கும்பல் தன்னைத் தாக்கி ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்களைக் கடத்திச் சென்றதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை அதுல்யா சந்திரா, நடிகர் பிபின் பெரும்பள்ளி மற்றும் அவர்களின் நண்பர் விஷ்ணு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் சோதனையில் வெளியான பகீர் தகவல்கள்
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான பெண்ணின் 50 வயது உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஃபோபார்க் போலீசார் விசாரணை நடத்தினர். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், மருத்துவர் ஜான்சன் வர்கீஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதைத் தனது செல்போனில் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். அதனை அழிக்கவே நடிகர்கள் மருத்துவரைச் சந்தித்ததாகக் கூறினார்.
மருத்துவரின் இரண்டு செல்போன்களைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜான்சன் வர்கீஸ் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான மருத்துவர்: ஜாமீன் தள்ளுபடி
கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர் ஜான்சன் வர்கீஸ் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடக் கொச்சி நகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, கைதான நடிகர்களின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தலைமறைவாக உள்ள மருத்துவரைப் பிடித்த பின்னரே இந்த வழக்கின் முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.