தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான சமூக வலைதளப் பிரபலம் நிஷாந்தை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் 15 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடிய நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு தருமபுரி மாவட்டத்தில் அவர் பிடிபட்டுள்ளார்.
பேருந்து ஜன்னல் வழியே குதித்து தப்ப முயற்சி
மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையான தனிஷ்க் ஷோரூமில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், குற்றவாளி நிஷாந்த் தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகேயுள்ள சேசம்பட்டி வழியாகப் பேருந்து ஒன்றில் தப்பிச் செல்ல முயல்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் தனிப்படையினர் அந்தப் பேருந்தை மடக்கிச் சோதனையிட்டனர். போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த நிஷாந்த், பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்துத் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
காதலி, தந்தையைத் தொடர்ந்து 3-வது கைது; நகைகள் மீட்பு
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், உதவி செய்ததாகவும் அவருடைய காதலியும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலமுமான மீனாட்சி நாச்சியார் மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். தற்போது முக்கிய நபரான நிஷாந்த் மூன்றாவது நபராகச் சிக்கியுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகளில் இதுவரை சுமார் 6 கிலோ தங்க நகைகளைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது பிடிபட்டுள்ள நிஷாந்திடம் நடத்தப்படும் தீவிர விசாரணையின் அடிப்படையில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 9 கிலோ நகைகளும் விரைவில் முழுமையாக மீட்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.