வரவிருக்கும் பண்டிகைக் காலப் பயணங்களை முன்னிட்டு, விமானப் பயணிகளின் வசதிக்காக எயர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனம் பல கவர்ச்சிகரமான சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் கல்வி நிமித்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் இளைஞர்களை முதன்மையாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானப் பயணக் கட்டணத்தைக் குறைப்பதுடன், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் வசதியையும் இந்த அறிவிப்பு வழங்குகிறது.
இந்தச் சலுகையின் கீழ், மாணவர்கள் தங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கான அடிப்படை விமானக் கட்டணத்தில் (Base Fare) 10% வரை தள்ளுபடி பெற முடியும். மேலும், பொதுவாக விமானப் பயணங்களில் 15 கிலோ அளவிலான செக்-இன் லக்கேஜ் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கூடுதலாக 10 கிலோ அனுமதிக்கப்பட்டு, மொத்தம் 25 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணத் திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், எயர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வழியாக வெறும் ₹99 கட்டணத்தில் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையைப் பெற விரும்பும் பயணிகள் குறைந்தபட்சம் 12 வயது பூர்த்தியடைந்த மாணவர்களாக இருக்க வேண்டும். அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படம், பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை தெளிவாக இடம்பெற்றுள்ள செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையைச் (Student ID) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான சிறப்புச் சலுகையானது வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.
மாணவர்கள் மட்டுமின்றி, பொதுப் பயணிகளுக்கும் எயர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் நேரடியாக விமானத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், ‘VIBES’ என்ற புரோமோ கோட்டைப் பயன்படுத்தியோ அல்லது விசா (Visa) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தியோ 5% வரை (அதிகபட்சமாக ₹600 வரை) தள்ளுபடி பெற முடியும். பொதுப் பயணிகளுக்கான இந்தச் சலுகை அக்டோபர் 9 ஆம் தேதி வரை கிடைக்கப்பெறும்.