இன்றைய நவீன காலத்தில் இருவர் அல்லது மூவர் கொண்ட சிறு குடும்பங்களே தனித்தனியாகப் பிரிந்து வாழும் சூழல் அதிகரித்து வருகிறது. ஆனால், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குர்லபள்ளி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 83 உறுப்பினர்கள் கடந்த ஆறு தலைமுறைகளாக ஒரே கூரையின் கீழ் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் கண்டு ஒட்டுமொத்த தேசமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.
இந்த பிரம்மாண்டக் குடும்பத்தின் தினசரி வாழ்க்கை முறையே மிகவும் சுவாரஸ்யமானது. இத்தனை பெரிய குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சமையல் செய்ய மட்டும் 50 கிலோ அரிசி தேவைப்படுகிறது. காலை உணவாக பாரம்பரிய ராகி களி உருண்டைகள் தயார் செய்யப்படுகின்றன. இத்தனை பெரிய நவீன காலத்தில் வாழ்ந்தாலும், இந்த வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் அல்லது கேஸ் ஸ்டவ் போன்ற எந்தவொரு நவீனப் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. பழங்கால முறைப்படி விறகு அடுப்பில் பெரிய பாத்திரத்தில் மட்டுமே 83 பேருக்கும் ஒரே இடத்தில் சமையல் செய்யப்படுகிறது. துவையல் மற்றும் மசாலாப் பொருட்களை உரல் மற்றும் ஆட்டுக்கல்லில் கைப்படவே அரைக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சமைத்தால் ஒரு ஆடு மற்றும் 10 கிலோ சிக்கன் தேவைப்படும். ஏதேனும் பண்டிகை என்றால் இரண்டு ஆடுகள் மற்றும் 20 கிலோ சிக்கன் வரை சமைக்கின்றனர்.
இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 டிராவல்ஸ் பேருந்துகளும் உள்ளன. தங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் காய்கறிகளைத் தாங்களே பயிரிட்டுக் கொள்கின்றனர். விளை பொருட்களைப் பிற இடைத்தரகர்களிடம் கொடுக்காமல், தாங்களே நேரடியாகச் சென்னை, கோலார், டெல்லி போன்ற சந்தைகளுக்குத் தங்களது வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.
குடும்பப் பெரியவர்களான ஹனுமந்த ராயுடு மற்றும் முத்யாலப்பா ஆகிய இருவரின் வழிகாட்டுதலிலேயே குடும்பத்தின் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. தினமும் காலையில் தேநீர் அருந்தும்போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி, அன்று யார் யார் என்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிடுகின்றனர்.
குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இடையே எந்தவிதப் பிரிவினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த காலத்தில் 9 இளைஞர்களுக்கு ஒரே நாளில், ஒரே முகூர்த்தத்தில் தர்மஸ்தலா என்ற தலத்தில் திருமணத்தைச் செய்து வைத்துள்ளனர். மேலும், வீட்டில் உள்ள 32 குழந்தைகளையும் எவ்வித பாகுபாடும் இன்றி அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்து வருகின்றனர். விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மையே தங்களின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணம் என இந்தக் குடும்பத்தினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.