தனியார் பள்ளிகளுக்கு அரசாணை மூலம் அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இருதரப்பிலும் மிகக் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
விசாரணையின் போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்டவிரோதமாகப் பணம் கொடுத்ததாகக் ஒப்புக்கொண்ட நபர்களைக் கைது செய்யாமல் சாட்சிகளாக மாற்றியிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வீட்டில் சுதந்திரமாக இருக்க அனுமதித்தது விசாரணையின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அவர் வாதிட்டார். மேலும், பள்ளி அங்கீகாரம் தொடர்பான கோப்புகள் பல அதிகாரிகளைக் கடந்து சென்றுள்ள நிலையில், அந்த அதிகாரிகள் சதியில் ஈடுபட்டார்களா அல்லது அறியாமையால் செயல்பட்டார்களா என்பது குறித்து காவலத்துறை முறையான விசாரணை நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளைத் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தி மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 20 ஆண்டுகளுக்குத் தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்குவதற்கும், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கும் பள்ளி நிர்வாகங்களிடம் ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இலக்கு நிர்ணயித்துத் திட்டமிட்டு வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அரசாணை வெளியீட்டைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடம் சட்டவிரோதமாக ரூ.400 கோடி வரை லஞ்சப் பணம் சுருட்டப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய காவல் துறை, இந்த வழக்கின் விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக் கூடாது எனக் கடுமையாக எதிர்த்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.