மந்திர ஒலி கேட்டால் இதயம் வலிக்குதோ? – சுப.வீ-யின் பதிவை பகிர்ந்து பாஜக ஷெல்வி கடும் தாக்குதல்! கொதிக்கும் அரசியல் களம்!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது தொடர்பாகத் தொடங்கிய கொள்கை விவாதம், தற்போது பாஜக மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இடையிலான நேரடி அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இத்திருமணத்தில் சடங்குகள் நடத்தப்பட்டதற்குத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் வெளியிட்ட வேதனைப் பதிவிற்கு, தமிழ்நாடு பாஜக ஆன்மீகப் பிரிவின் தலைவர் ஷெல்வி மிகக் காரசாரமான முறையில் மறுபதிவு செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

சுப. வீரபாண்டியனின் பதிவைப் பகிர்ந்த பாஜக தலைவர் ஷெல்வி, இந்து தர்மச் சடங்குகளைப் புறக்கணிக்கும் திராவிட அமைப்புகளின் போக்கை வன்மையாகச் சாடியுள்ளார். “மந்திர ஒலி கேட்டால் இவர்களுக்கு இதயம் வலிக்கிறது. இப்படியே பேசிக்கொண்டு இருங்கள், தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு மொத்தத் தலைவலியையும் கொடுப்பார்கள்! இந்து தர்மத்தின் உடைய மந்திரங்கள் என்றாலே உங்களுக்கு எப்போதும் கசப்பாகத் தான் இருக்கும்” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், திருமணத்தில் சடங்குகள் நடத்தப்பட்டதற்கான நியாயத்தைக் குறிப்பிட்ட அவர், “அவருடைய சம்பந்தி வீட்டுக்கு, மந்திர வழி சடங்குகள் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா?” என வினவி, திராவிட அமைப்புகளின் தலையீட்டைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பத்திலும், பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார் பின்பற்ற விரும்பும் பாரம்பரிய முறைகளிலும் அரசியல் புகுத்தப்படுவதைப் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயமரியாதைத் திருமணக் கொள்கை என்ற பெயரில் திமுக கூட்டணிக்குள்ளேயே எழுந்த இந்தச் சலசலப்பைப் பாஜக தனக்கு சாதகமான வாய்ப்பாக மாற்றிக் கொண்டுள்ளது. திராவிட இயக்கத்தினர் இந்து மதச் சடங்குகளைத் தொடர்ந்து இழிவுபடுத்துவதாக பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழகத்தில் திராவிடக் கொள்கைக்கும் இந்துத்துவ ஆதரவு நிலைகளுக்கும் இடையிலான பெரும் போராக மாறியுள்ளது. இருதரப்பு தலைவர்களும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அடுத்தடுத்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில அரசியல் களத்தில் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.